Feed the Fishes

Don't forget to feed the fishes by clicking over the water, coz they are hungry

Pages

Tuesday, September 14, 2010

ஒரு வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிக்க...


ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன். அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது.
உடனே மனம் உடைந்து போனான். அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாத போது, இந்தச் சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!" என விவரித்தான் இளவரசன். மன்னர் சிரித்துவிட்டு "எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது. அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார்.
அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே..நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார். அதற்கு அரசர் நடந்ததை கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி. அதேபோல் அந்நாடுகளிலிருந்து இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன. ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது.
எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. "என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார். உடனே இளவரசர் மறித்து "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார்.
வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம்! ஜப்பான்,பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார். அதற்குக் காவலாளி "பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே... என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்" என்றான். உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது.
அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவெற்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?. ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தைக் கச்சிதமாகச் செய்து முடிக்க முடியும்.

நன்றி: பால்ராஜ் ராஜா

No comments: